காளியாகிய நெருப்பைச் சுவைத்தபோது இது நிகழ்ந்தது…!
ம.செந்தமிழன்
-ம.செந்தமிழன்
அமாவாசைக்கு மறுநாள் இரவில் அந்த மலை அடிவாரத்தில் அவன் அமந்திருந்தான். பாறை ஒன்றின் மேல் சாய்ந்து உட்கார்ந்தவாறு, மலைக் காட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த இருளிலும் அவனது நிழல் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தது. இருளில் மலைக்காட்டின் அழகு, மயிர்க்கால்களை எழும்பச் செய்தது. எந்த அழகையும் ஆழமாக உணர வேண்டுமானால், கண்களை மூடிக்கொள்வது அவன் வழக்கம். எந்த உரையாடலும் சிறக்க வேண்டுமானால், வாயை மூடிக்கொள்வதும், நற்சொற்களைக் கேட்க விரும்பினால் செவிகளைச் சாத்திக்கொள்வதும், நல்லாற்றல் கிடைக்க வேண்டுமானால் பட்டினியாகக் 8கிடப்பதும் கூட அவன் வழக்கங்கள். அதாவது அவன் ஒரு மூடன்.
மூடன் என்பதால் அவனது நிழலுக்கு அவனைப் பிடித்திருந்தது. ஏனெனில், நிழலுக்கு வெளிச்சம் ஆகாது. நிழலுக்கு தர்க்கம் பிடிக்காது. தர்க்கம் பேசுவோர் நிழலைத் துரத்திவிடுகிறார்கள் அல்லவா. நீங்கள் கூட உங்கள் வாழ்விடத்தைக் கவனியுங்கள். நிழல் விழாதவகையில் மிகை வெளிச்சத்தைத்தான் பரவச் செய்கிறீர்கள். எல்லா இரவுகளும் விளக்குகளால் சீரழிகின்றன. நவீன மனிதர்கள் நடமாடும் எல்லாக் காடுகளும் இரவை இழக்கின்றன. மின்மினிப் பூச்சி இனமே உங்கள் வாழ்விடங்களில் அழிந்துவிட்டது. அந்தளவுக்கு வெளிச்சத்தின் மீது பற்றுகொள்கிறீர்கள்.
இந்த மூடனது நிழல் இருளை விரும்பும். வானிலிருந்து கசியும் வெளிச்சமே எல்லா இரவுகளுக்கும் போதுமானது என்பது அந்த மூடன் கருத்து. இதுவே நிழலுக்கும் அவனுக்குமான பிணைப்பு.
விண்மீன்கள் கசியவிட்ட நுண் வெளிச்சத்தில் மலைக் காடு வனப்பாகக் காட்சியளித்தது. மலையின் உச்சியில் தெரிந்த ஒற்றைப் பாறையில் இரு கண்கள் தெரிந்தன. அக்கண்கள் மூடனை உற்றுப் பார்த்தன. அவன்தான் கண்களை மூடிக்கொண்டிருக்கிறானே, அதனால் அவனுக்கு இந்தக் காட்சி மிகத் தெளிவாகத் தெரிந்தது.
கண்கள் திறந்த அப்பாறையின் கீழே மேலும் இரு பாறைகள் இருந்தன. அப்பாறைகளின் இடுக்குகள் வழியாக மழைநீர் வழிந்துகொண்டிருந்தது. இந்த இரு பாறைகளும் பெரிய முலைகளாகின. இன்னும் சற்று கீழே மலையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அதற்கும் கீழே விவரிக்கவியலாத மரங்களும் புல்வெளிகளும் இருந்தன.
மூடன் விழிகளை மேலும் இறுக்கிகொண்டான்.
மலை அடிவாரத்தில் அவன் உட்கார்ந்திருந்த பாறையே இரண்டு பாதங்களின் வடிவம்தான் என்பதைக் கடைசியாக அறிந்துகொண்டான். பாதம் அசைந்தது. இவனும் அசைந்தான் நிழலும் அசைந்தது. மலைக் காட்டின் பக்கவாட்டுப் பகுதிகளில் தெரிந்த ஓடைகள் இரண்டும் கரங்களாகின. மூடனும் நிழலும் இடது பாதத்தில் அமர்ந்திருந்தனர்.
மூடனது அகவெளி விரியத் துவங்கியது. மலைக்காடு தேவியானது. தேவி, அன்னை, காளி போன்ற பல்வேறு பெயர்களால் அவளை அழைப்பது மூடன் வழக்கம்.
எல்லாச் சொற்களும் ஒரு பொருளைக் குறிப்பவைதான் என அவன் நம்பினான்.
தேவி எழுந்து நின்றாள். பாதத்திலிருந்து மூடனும் நிழலும் இறங்கினார்கள். மூடன் தேவியை நோக்கி ஆர்ப்பரித்தான். தேவியாகிய அன்னை மூடனை நோக்கி ஆடினாள். மலைக்காடு நிமிர்ந்து எழுந்து ஆட்டமாக ஆடியதைக் கண்ட நிழல், தானும் ஆடியது. மூவரும் இணைந்து தாண்டவமாடினர். தேவியின் முலைகளில் வழிந்த நீரோடைகள் பால் ஊற்றுகளாகத் தெரிந்தன. ஆடிய ஆட்டத்தில் பால் தெளித்து மூடனை நனைத்தது.
தேவி மூடனைத் தன் விரலால் தூக்கி மார்பில் சாய்த்தாள். அவனோ மார்பின் பள்ளம் வழியாக சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து எழுந்து ஆடினான். நிழல், தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் ஓடியாடியது.
’அன்னையே உன் மீது நான் படர்வது நியாயமா?’ என மூடன் கேட்டான்.
’எல்லாப் பிள்ளைகளையும் நான் என்மீதுதான் படரவிடுகிறேன்’ என்றாள் அன்னை.
’அன்னைக்கும் பிள்ளைக்கும் மரியாதைக்குரிய இடைவெளி வேண்டாமா?’ என்றான் அவன்.
‘மரியாதை இருக்குமிடத்தில்தான் இடைவெளி இருக்கும். நமக்குள் இடைவெளி தேவையில்லை’ என்றாள் அவள்.
’நான் மலைக்காட்டினைக் காண வந்தேன். நீ இங்கே தோன்றியதேன்?’ எனக் கேட்டான் மூடன்.
’என் படைப்பில் எதைக் கண்டாலும் அதில் எனைத்தான் காண்பாய்’ என்றாள் தேவி.
‘இங்கே மலைகளையும் காடுகளையும் அழிக்கிறார்களே…அவர்கள் உன்னை அழிப்பதாக அர்த்தமா?’ எனக் கேட்டான் மூடன்.
‘தலை மயிரை வெட்டினால் மயிருக்கு இழப்பென்ன? விரலை வெட்டினால் விரலுக்கு இழப்பென்ன? ஆண் குறியை வெட்டினால் குறிக்கு இழப்பென்ன? முலைகளை அறுத்தெறிந்தால் அவற்றுக்கு இழப்பென்ன? மலைகளை வனங்களை அழித்தால் எனக்கு இழப்பென்ன?’ எனக் கேட்டாள் தேவி.
’என் சந்ததிக்கு மலைகளும் காடுகளும் இருக்க வேண்டாமா?’ என மூடன் கேட்டான்.
நிழல் உரக்கச் சிரித்துக் கத்தியது, ‘இதோ இந்த மூடனுக்கே அடுத்த வேளை உணவு எவர் வீட்டில் எனத் தெரியாது. இவன் சந்ததிக்காகப் பேசுகிறான்’ என்றது நிழல். பின்னர் அதுவே கூறியது, ‘அதனால்தான் நான் இவன் நிழலாக இருக்கிறேன். எப்போதும் மூடர்களின் நிழலாக இருப்பது சரியானது. அறிவாளிகளோ வெளிச்சத்தை நாடுவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்’ என்றது நிழல்.
’சந்ததிக்குக் காடுகள் வேண்டும்’ என மூடன் கேட்டதும், தேவியின் உருவம் வேறு விதமாக மாறியது. இப்போது அவள் காளி ஆனாள். உற்சாகத் தாண்டவம் மாறிப்போனது. அவளது அசைவுகளில் தீப்பொறிகள் தெறித்தன. அப்பொறிகளில் சில மரங்கள் சடசடத்து எரிந்தன.
மூடனைப் பார்த்து காளி கூறினாள், ‘சந்ததிக்கு வாழ்க்கை வேண்டும் என நீ உண்மையிலேயே விரும்புகிறாயா? அப்படியானால், நெருப்பைப் பற்றிக்கொள்’
‘நெருப்பா…? அது ஆபத்தான பூதமாயிற்றே…’ என்றான் மூடன். வான் அதிரும்படியாகக் கூக்குரலிட்டுப் பேசினாள் காளி, ‘இந்தக் காடு நெருப்பில்தான் பிறந்தது. மரங்களும் பறவைகளும் நெருப்பில்தான் பிறந்தன. என் தலைவனுடைய நீரும் என்னுடைய நெருப்பும் புணர்ந்துதான் உங்களைப் படைத்தோம். ஆகவே, நெருப்பை நீயும் பற்றிக்கொள்’ என்றாள் அவள்.
’நெருப்பு என்னைச் சுடாதா?’ எனக் கேட்டான்.
‘நெருப்பு தன்னை விட்டு விலகுவோரைச் சுடும். உள்ளிருப்போரை வடிவமைக்கும். இந்த பூமியின் உள்ளிருப்பது நெருப்புதான். நெருப்புதான் பூமியின் வடிவத்தைக் காப்பாற்றிக்கொண்டுள்ளது. நெருப்பை வயிற்றுக்குள் வைத்திருக்கும் நிலம் நிம்மதியாக இருக்கும். நெருப்பிலிருந்து விலகி நிற்கும் மரங்கள் நெருப்பில் அழியும். நீ உள்ளே வந்துவிடு, உன் வடிவம் வலுவடையும்’ என்றாள் காளி.
’அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?’ என மூடன் கேட்டான்.
‘நீ நெருப்பின் வயிற்றுக்குள் வந்துவிட்டால், நீ எரிக்கத் துவங்குவாய். இங்கே உயிர்கள் வாழும் சூழல் நிலைபெற வேண்டுமென்ற உன் வேட்கையின் வெப்பம் பிசாசுகளின் உடலைப் பொசுக்கும். மேலும் பலரை நீ நெருப்புக்குள் குடியமரச் செய்வாய்.
என் தலைவனுக்கு புழுவும் மனிதரும் ஒன்றுதான். அவர் எல்லாவற்றையும் உயிர்களாகப் பார்க்கிறார். புழு அழிந்தாலும் அது வேறு வடிவத்தை அடைகிறது. அதன் உயிர் அழிவதில்லை. அதேபோல மனிதர்கள் அழிந்தாலும் என் தலைவனுக்குக் கவலை இல்லை. ஏனெனில், அவருக்கு உயிர்கள் போதும். நான் உருவத்தைச் சுமப்பவள்.
எனக்குப் புழுக்கள் புழுக்களாக வாழ வேண்டும். மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும். எனது உணர்ச்சிகளை, உறவுகளின் மீதான பற்றுதலை எல்லா உயிரினங்களிலும் பெண்மைக்குக் கொடுத்தேன். எல்லாப் பெண்களுக்கும் உறவுகள் மேன்மையானவை. நெருப்பின் வயிற்றில் நுழைந்த பின்னர், நீயும் பெண்ணாகிறாய். வா…வந்து தீயாகுவாய்’ என்றாள் காளி.
மூடன் எழுந்து காளியின் நாக்கில் எரிந்த நெருப்பை நக்கினான். இவனது நாக்கும் கொழுந்துவிட்டெரிந்தது. அந்தக் கொழுந்தின் ஒரு பகுதியை நிழலுக்கு நீட்டினான். நிழலும் தீயைச் சுவைத்தது.
காளியும் இவர்கள் இருவரும் இணைந்து நெருப்பாட்டம் ஆடிக் களித்தனர்.
நீரையும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் நெருப்பு தேவை என்பதை இந்தத் தாண்டவம் உறுதிப்படுத்தியது. அதன் பின்னர் மூடனும் நிழலும் தங்கள் சமூகத்தில் தீக் கங்குகளைப் பரிசளித்தனர்.
அக்கங்குகளை அணைக்காமல் வளர்த்தவர்களில் பெரும்பகுதியினர் பெண்களாக இருந்தனர் அல்லது ஆணாகப் பிறந்தும் பெண்மையின் மேன்மையை உணர்ந்தவர்களாக இருந்தனர்.
No comments:
Post a Comment